மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை


மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 30 May 2018 11:30 PM GMT (Updated: 30 May 2018 10:47 PM GMT)

மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மும்பை,

பால்கர், பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இரு தொகுதிகளையும் பா.ஜனதா தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பால்கர் தொகுதி எம்.பி.யான பா.ஜனதாவை சேர்ந்த சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். பண்டாரா-கோண்டியா தொகுதி எம்.பி. நானா பட்டோலே பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியதோடு, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியான பால்கர் மற்றும் பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பால்கரில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா தனித்து போட்டியிட்டன.இதில் மறைந்த பா.ஜனதா எம்.பி. சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா சிவசேனா சார்பில் போட்டியிட்டார்.

இதனால் கவுரவப் பிரச்சினையாக மாறிப்போன பால்கர் தொகுதியில் இரு கட்சிகளும் வெற்றிபெற தீவிரமாக செயல்பட்டன. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோரை பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் களம் இறக்கியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கடுமையாக போராடியது. பிரதான கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ் ஆகியவற்றின் வேட்பாளர்கள் உள்பட 7 பேர் பால்கர் தொகுதியில் களத்தில் உள்ளனர். இதேபோல பண்டாரா-கோண்டியாவில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட 18 பேர் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பண்டாரா-கோண்டியா தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி சீட்டு வரவில்லை. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறு ஏற்பட்டது.

சிவசேனா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு எந்திர கோளாறை பா.ஜனதாவின் சதிச்செயல் என குற்றம்சாட்டின. இதையடுத்து பண்டாரா-கோண்டியாவில் உள்ள 49 வாக்குச்சாவடிகளுக்கு நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. பரபரப்பாக நடந்து முடிந்த வாக்குப்பதிவை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) பால்கர் மற்றும் பண்டாரா-கோண்டியா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரு தொகுதிகளும் பா.ஜனதாவின் வசம் இருந்தவை ஆகும். எனவே அந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து ஆளுக்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அக்கட்சிகள் தங்களது கூட்டணி பலத்தை நிரூபிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

Next Story