தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார


தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார
x
தினத்தந்தி 3 Jun 2018 10:00 PM GMT (Updated: 3 Jun 2018 9:45 PM GMT)

சட்டசபை தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என பா.ஜனதா விமர்சனம் செய்தது.

பெங்களூரு,

சட்டசபை தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என பா.ஜனதா விமர்சனம் செய்தது.

செயல் தலைவர் பதவி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பல்வேறு மாற்றங்களை செய்தது. அதன் அடிப்படையில் அக்கட்சியில் 2 செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தென் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். அதே போல் வட கர்நாடக பொறுப்புகளை கவனிக்க மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதியிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சியை நடத்தும் பொறுப்பை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

எனக்கு அதிருப்தி

காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை எஸ்.ஆர்.பட்டீல் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஆர்.பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டசபை தேர்தலில் வடகர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றவில்லை. இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். வடகர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால், நாங்கள் சொந்த பலத்தில் ஆட்சி அமைத்து இருப்போம். மேலும் காங்கிரசில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது எனது கருத்தை கேட்கவில்லை. இது எனக்கு அதிருப்தி தந்துள்ளது. ஆயினும் காங்கிரசை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை.

முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா, எனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்றுத்தர முயற்சி செய்வதாக கூறப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கட்சி எனக்கு எந்த பதவியை வழங்கினாலும் அதை ஏற்று திறம்பட பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா விமர்சனம்

எஸ்.ஆர்.பட்டீல் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “மக்களின் ஆதரவை புறக்கணித்துவிட்டு ஆட்சி அதிகார பசிக்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது இந்த கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் ஆகும்“ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story