கிருஷ்ணகிரி அணையில் அதிகளவில் தண்ணீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கிருஷ்ணகிரி அணையில் அதிகளவில் தண்ணீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:15 PM GMT (Updated: 7 Jun 2018 8:34 PM GMT)

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் முதல் மதகில் ஷட்டர் உடைந்ததை தொடர்ந்து தற்காலிகமாக ஷட்டர் அமைக்கப்பட்டது. அந்த ஷட்டரை அகற்றி விட்டு, புதிய ஷட்டர் அமைக்கும் பணிக்காக அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 1,135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிலும், இடது மற்றும் வலது பாசன கால்வாய்கள் மூலம் 1,859 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் 3 சிறிய மதகுகள் வழியாக 1,359 கனஅடி தண்ணீரும், 5-வது மதகு வழியாக 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 42 அடியாகும். நேற்றைய நீர்மட்டம் 33.75 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றி 31 அடியாக குறைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து புதிய ஷட்டர் அமைக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அணையில் உள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் அணைக்கு தரைப்பாலத்தில் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story