நெல்லை–தாம்பரம் புதிய ரெயில் சேவை தொடக்கம்: அந்த்யோதயா ரெயிலுக்கு பயணிகள் வரவேற்பு பயண நேரத்தை குறைக்க கோரிக்கை


நெல்லை–தாம்பரம் புதிய ரெயில் சேவை தொடக்கம்: அந்த்யோதயா ரெயிலுக்கு பயணிகள் வரவேற்பு பயண நேரத்தை குறைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2018 3:00 AM IST (Updated: 10 Jun 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை–தாம்பரம் ‘அந்த்யோதயா‘ ரெயலுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பயண நேரத்தை குறைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை–தாம்பரம் ‘அந்த்யோதயா‘ ரெயலுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பயண நேரத்தை குறைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ரெயில் சேவை

சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா‘ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சேவையை மத்திய மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரெயில் நேற்று காலை 5 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தது. நெல்லை–தாம்பரம் ‘அந்த்யோதயா‘ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு நெல்லையில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் மதியழகன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சந்திப்பு ரெயில் நிலைய வணிக ஆய்வாளர் ராமச்சந்திரன், நெல்லை–மும்பை பயணிகள் நலச்சங்க தலைவர் அப்பாத்துரை, நெல்லை ரெயில் நிலைய முன்னாள் மேலாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ரெயிலில் 16 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. நேற்று முதல் நாள் என்பதால் ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்த ரெயில் கட்டணம் ரூ.240 ஆகும்.

வரவேற்கத்தக்கது

ரெயிலில் பயணம் செய்த ராமகிருஷ்ணன் கூறும் போது, “எனது சொந்த ஊர் தஞ்சாவூர். திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன். சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்புகிறேன். இந்த புதிய ரெயில் பற்றி கேள்விபட்டேன். நெல்லைக்கு வந்து புதிய ரெயிலில் ஊருக்கு போக முடிவு செய்தேன். அதனால் இங்கு வந்து ரெயில் ஏறி இருக்கிறேன். இந்த ரெயில் சேவை மிகவும் வரவேற்கத்தக்கது. முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்டு ரெயில் இயக்கப்படுகிறது“ என்றார்.

நெல்லை டவுனை சேர்ந்த பேச்சியம்மாள் கூறும் போது, “நான் குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு செல்கிறேன். நான் ரெயில் நிலையத்துக்கு வந்த பிறகு தான், இந்த புதிய ரெயில் சென்னைக்கு போகிறது என்று தெரிந்து கொண்டேன். இந்த ரெயில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. புதிய ரெயில் பற்றி பொதுமக்களுக்கு தெரியவில்லை. இதுபற்றி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்“ என்றார்.

நேரத்தை குறைக்க வேண்டும்

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “இந்த புதிய ரெயில் கோடைகாலத்தில் இயக்கி இருந்தால் ஏராளமான பயணிகள் பயன் அடைந்து இருப்பார்கள். ரெயிலில் வேகத்தை அதிகரித்து நேரத்தை குறைக்க வேண்டும். கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ஊர்களில் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்போன்களில் ரெயில் கட்டணம் தவறுதலாக வருகிறது. அதை சரி செய்ய வேண்டும். இந்த ரெயிலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்“ என்றனர்.


Next Story