வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி
வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததில் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர்,
வாலாஜா தாலுகா மோட்டூர் அணங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், நான் அரசு வேலையில் சேர முயன்று வந்தேன்.
இந்த நிலையில் பூட்டுதாக்கை சேர்ந்த ஒருவர் வனத்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்று கூறினார். மேலும் வனத்துறையில் உதவியாளராக சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூ.4 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டால், விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் கடத்தியும், நான் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த ரூ.4 லட்சத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.