சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு ஓட்டுகிறார்கள் கலெக்டரிடம் நலச்சங்கத்தினர் புகார் மனு
சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு ஓட்டுகிறார்கள் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 75–க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் சுற்றுலா வாகனங்கள் வைத்துள்ளோம். மேலும் அரசுக்கு முறையாக வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். தற்போது சொந்தமாக வாகனங்களை வைத்து இருப்போர் அரசை ஏமாற்றி அரசுக்குரிய வரியை செலுத்தாமல் வாடகைக்கு இயக்கி வருகிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சண்முகம் கொடுத்திருந்த மனுவில், ‘நான் ஈரோடு மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் நலன் மற்றும் உரிமைகளுக்காக போராடி வருகிறேன். இதனால் என்னை பலர் மிரட்டி வருகிறார்கள். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலாளர் மாணிக்கம் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாள்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரை சேர்ந்த தனசேகரன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் தனியார் நிறுவனம் ஒன்றில் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளேன். அதற்காக மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்து 820 கட்டி வருகிறேன். ஒரு மாதம் தவணை தொகை செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் எனது வீட்டுக்கு வந்து எனது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டிச்சென்றுள்ளார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னையும் அவர் தாக்கிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் 13 பேர் கண்களில் கரும்பு துணி கட்டிக்கொண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்திருந்த மனுவில், ‘நெய்வேலியில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய எங்கள் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தமிழ்நாடு புரட்சி கழக மாநில அமைப்பாளர் பிரபாகரன் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகளிடம் தனியார் ஒருவர் சீட்டு போட்டு ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளார். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
ஈரோடு பெரியசேமூர் எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடம் செயல்படக்கூடாது என்று தனியார் ஒருவர் சுற்றுச்சூழல் துறை உதவி பொறியாளரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே எங்கள் பகுதியில் உள்ள விசைத்தறி கூடம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் திருமலை நகரை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டியும், கோபிசெட்டிபாளையம் செல்லக்குமாரபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருந்து வரும் இடத்துக்கு பட்டா கேட்டும், ஈரோட்டை சேர்ந்த திருநங்கைகள் சிம்ரன், மதுமிதா, சுஷ்மிதா ஆகியோர் இலவச வீடு வேண்டியும் மனு கொடுத்தார்கள். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 217 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 10 பேருக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 565 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.