பர்கூர் மலைக்கிராமத்தில் தொடரும் அட்டகாசம் 3 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது


பர்கூர் மலைக்கிராமத்தில் தொடரும் அட்டகாசம் 3 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 6:42 PM GMT)

பர்கூர் மலைக்கிராமத்தில் சிறுத்தைப்புலி, 3 ஆடுகளை கடித்துக்கொன்றது.

அந்தியூர்,

பர்கூர் மலைக்கிராமத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலி, 3 ஆடுகளை கடித்துக்கொன்றது. சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட பெஜில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்தையன் (வயது 30). இவர் 12–க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது.

இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து சித்தையன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளியே சென்று பார்த்தனர். அப்போது ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டு இருந்து ஒரு ஆட்டை சிறுத்தைப்புலி கடித்து குதறிக்கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தையன் ஆட்டுப்பட்டிக்கு செல்லாமல் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உள்ளே குடும்பத்தினருடன் இருந்து விட்டார்.

பின்னர் காலை 6 மணி அளவில் மற்ற விவசாயிகளுக்கு செல்போன் மூலம் சித்தையன் தகவல் கொடுத்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கு வந்தனர். மேலும் சித்தையனும் ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 3 ஆடுகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்றனர்.

தகவல் அறிந்து கால்நடை டாக்டர் சுரேசும் சம்பவ இடத்துக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்ற செம்மறி ஆடுகளின் உடலை பார்வையிட்டனர். மேலும் கால்நடை டாக்டர் சுரேஷ், இறந்த செம்மறி ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். சிறுத்தைப்புலி கடித்துக்கொன்ற 3 செம்மறி ஆடுகளின் உடல்களும் அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

காலை நேரத்தில் சிறுத்தைப்புலி மலை கிராமத்தில் புகுந்து செம்மறி ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட மலை கிராமப்பகுதிகளில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் துருசனாம்பாளையம் பள்ளத்து தோட்டம் பகுதியை சேர்ந்த பொம்மனின் 3 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.

மீண்டும் சித்தையன் என்பவரின் ஆடுகளையும் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்று உள்ளது. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. மனிதர்களை சிறுத்தைப்புலி அடித்துக்கொல்லும் அபாயம் உள்ளது. அதனால் பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைக்க வேண்டும். மேலும் தீவிர ரோந்தில் ஈடுபட வேண்டும்` என்றனர்.


Next Story