கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது


கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 19 Jun 2018 10:04 PM GMT (Updated: 19 Jun 2018 10:04 PM GMT)

ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கேப்டன் காட்டன் கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

பெரம்பூர்,

சென்னை மூலக்கடையில் இருந்து கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் வியாசர்பாடி வழியாக செல்லும் கேப்டன் காட்டன் கால்வாய் ஆர்.ஆர்.நகர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த கால்வாயின் இருபுறமும் திருவள்ளூர் நகர், கண்ணதாசன் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. 

அந்த பகுதியில் உள்ள சுமார் 6000–க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இந்த கால்வாயில் தான் கலக்கிறது. இந்த நிலையில் கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும், கோரைப்புற்களும் ஆக்கிரமித்தன. இதனால் அங்கு கால்வாய் இருக்கிறதா? என்பதே தெரியவில்லை. 

பொதுமக்கள் கோரிக்கை 

மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் குப்பைகளும் தனது பங்கிற்கு ஆகாய தாமரை செடிகளுடன் சேர்ந்து கால்வாயை அபகரித்தது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது. 

இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், கேப்டன் காட்டன் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதாக கடந்த 18–ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. 

தூர்வாரும் பணி தொடங்கியது 

இந்த நிலையில் பொதுமக்களின் இன்னல்களை அறிந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருந்த கேப்டன் காட்டன் கால்வாயை தூர்வார முடிவு செய்தனர். 

இதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை 4–வது மண்டல அதிகாரி அனிதா உத்தரவின்பேரில் மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் தனசேகர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கேப்டன் காட்டன் கால்வாய் பகுதிக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயை ஆக்கிரமித்த ஆகாய தாமரை மற்றும் கோரப்புற்களை அகற்றும் பணியை தொடங்கினார்கள். இந்த பணிகள் சுமார் ஒரு வாரம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Next Story