சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வரும் 25–ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
சென்னை,
சங்க தலைவர் டி.ரவி, கண்காட்சி தலைவர் கே.அய்யப்பன், கன்வீனர் ஆர்.எஸ்.எஸ்.சதீஷ்பாபு, சங்க ஆலோசகர் எம்.பாலசந்திரன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாது:–
சக்தியை சேமிப்பதற்கான தீர்வுகள், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், தொழில்முறை ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியக்கம் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் தொடர்பாக சென்னை, வர்த்தக மையத்தில் வரும் 21–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை 5 நாட்கள் 13–வது ‘சர்வதேச எந்திர கருவிகள் (மெஷின் டூல்ஸ்) கண்காட்சி நடக்கிறது.
இதனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார். துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொழில் துறை அமைச்சர் பி.பென்ஜமீன் முன்னிலை வகிக்கிறார். 28 நாடுகளைச் சேர்ந்த 480 நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் 10 ஆயிரத்து 50 சதுர மீட்டர் பரப்பில் பிரம்மாண்டமான 5 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ரூ.500 கோடிக்கு வர்த்தகம்
கண்காட்சியில் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கண்காட்சி தினசரி காலை 10 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை
திறந்திருக்கும். 50 ஆயிரம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொழில்களின் போக்குகளை கருத்தில் கொண்டு, தொழில்முறையில் இணையதளம், செலவைக் குறைத்தல், துல்லியம், போட்டி நிறைந்த சூழலில் நேரத்தையும், சக்தியையும் சேமித்தல் ஆகியவற்றுக்கான தீர்வுகளை இந்த கண்காட்சி அளிக்கிறது.
தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் செய்துள்ள திட்டங்களை எடுத்துக்காட்டுவதற்காக, தனியாக இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் ரோபோக்களும் கொண்டுவரப்பட்டு செயல்முறை விளக்கமும் அளிக்கப்
படுகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் இந்தியாவில் உருவாக்கு (‘மேக்–இன்–இந்தியா) என்ற திட்டத்திற்கும் இந்த கண்காட்சி நேரடியாக உதவும். தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story