தினம் ஒரு தகவல் : ஆந்தைகளால் ஏற்படும் நன்மைகள்


தினம் ஒரு தகவல் : ஆந்தைகளால் ஏற்படும் நன்மைகள்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:53 AM GMT (Updated: 20 Jun 2018 4:53 AM GMT)

எல்லா வகை ஆந்தைகளும் இரவில் நடமாடும் வேட்டையாடிகள். மற்ற பறவைகளைப் போல் இல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்களைப் போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன.

ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்பி பார்க்க முடியும். இதன் சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்து, இரை இருக்கும் இடத்தை துல்லியமாக கணிக்க முடியும். குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றி பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன.

முதுமலை போன்ற காடுகளில் வாழும் காட்டாந்தை, முயலை எளிதாக அடித்து உண்ணும். மாலை வேளைகளில் மரங்களில் அடையவரும் மயிலைக்கூடக் கொல்லும் வலுவுடையது இது. நீர்நிலைகள் அருகே வசிக்கும் இன்னொரு வகை ஆந்தை தன் கால்களால் மீன், தவளை, நண்டுகளைப் பிடித்து இரையாக்கி உயிர் வாழ்கிறது. பயிர்த் தோட்டங்கள், வயல் கள் அருகே இருக்கும் வெண்ணாந்தைகளுக்கு (கூகை) அதிகமாக இரையாவது எலி தான். நம் நாட்டில் உணவு தானியங்களை சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று, இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்கு பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் உள்ள தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள். இனப்பெருக்க காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளை கொன்றுவிடும்.

இன்று ஆந்தைகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. மாந்த்ரீக சடங்குகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும், பாரம்பரிய மருத்துவத்துக்காகவும் பல்வேறு இன ஆந்தைகள் ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவதை பற்றி அறிய முடிகிறது. ஆந்தை, செல்வத்தின் கடவுளான லட்சுமியின் வாகனம் என்றாலும், ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் பேய், பிசாசுகளுடன் தொடர்புபடுத்துவதால், இவை வெறுக்கப்படுகின்றன.

முதலில் இந்தப் பறவையினம் பற்றிய அச்சம், ஆதாரமற்ற தப்பான எண்ணங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் இருந்து அகற்ற வேண்டும். காட்டு உயிர் பற்றிய அறிவு வளர வேண்டும். எல்லா வகை ஆந்தைகளும் காட்டு உயிர் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவற்றைப் பிடிப்பதோ கூண்டில் அடைத்து வைத்திருப்பதோ சட்டத்துக்கு புறம்பானது. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதற்கும், வேளாண்மை, தானியப் பாதுகாப்பிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. 

Next Story