கர்நாடகாவில் பலத்த மழை எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 65 அடியாக உயர்வு
கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்து உள்ளது. வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்வதால் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைகளுக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந்தேதி காலை அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரத்து 334 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் மேலும் அதிகரித்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 65.15 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் அளவு மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு நீடித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை எட்டி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதை நம்பி உள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.