விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். முட்டி போட வைத்து அவமதித்ததால் வெட்டிக் கொலை செய்ததாக முக்கிய குற்றவாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

வில்லியனூரை அடுத்த கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). இவர் பால் விற்பனை செய்து வந்ததுடன் மாட்டு வண்டி மூலம் ஆற்றில் மணல் எடுத்தும் விற்று வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரையான்பேட் பகுதி முகாம் துணைச் செயலாளராகவும் இருந்தார்

கடந்த 14–ந் தேதி வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுச்சேரி சட்டம்– ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் உத்தரவின்பேரில் மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த வழக்கில் வில்லியனூர் கணுவாப்பேட் ஓடைத்தெரு சேகரின் மகனான அய்யனார் என்கிற தடி அய்யனார் (24), மணிகண்டன் என்கிற கட்ட மணி (23), சந்துரு என்கிற அஜித்குமார் (22) ஆகியோருக்கும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, வீச்சரிவாள், மோட்டார் சைக்கிள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் கரிக்கலாம்பாக்கம் பாண்டியன் என்கிற அருண்பாண்டியன், அர்ஜூன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான அய்யனார் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

கடந்த ஜனவரி மாதம் கரையான்பேட் பகுதியில் ஒரு இடத்தில் அமர்ந்து இளவரசனும், அவரது நண்பர்களும் மது குடித்துக் கொண்டிருந்தார். அதேபோல் நானும், எனது நண்பர்களும் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைதொடர்ந்து இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இளவரசன் என் தலையில் பீர் பாட்டிலால் தாக்கினார். எனது நண்பர்களும் தாக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் என்னையும், எனது நண்பர்களையும் முட்டி போட வைத்து அவமானப்படுத்தினார்கள்.

இதனால் இளவரசன் மீது ஆத்திரம் இருந்து வந்தது. இந்தநிலையில் இளவரசன் எங்களை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். எனவே அவரை தீர்த்துக்கட்ட நானும், நண்பர்களும் முடிவு செய்தோம்.

இதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தபோது கடந்த 14–ந் தேதியன்று பால் ஊற்றுவதற்காக சென்ற இளவரசனை வழிமறித்து வெட்டி கொலை செய்தோம். இதற்குதேவையான ஆயுதங்களை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பாண்டியன் என்கிற அருண்பாண்டியன் வழங்கினார்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். அய்யனார், மணிகண்டன், சந்துரு ஆகியோரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா பாராட்டினார்.


Next Story