5-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் டீசல் விற்பனை 60 சதவீதம் குறைந்தது


5-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் டீசல் விற்பனை 60 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 24 July 2018 11:00 PM GMT (Updated: 24 July 2018 9:26 PM GMT)

5-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் சேலம் மாவட்டத்தில் டீசல் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது.

சேலம்,

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையோரங்களிலும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் மாநிலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் பல்வேறு பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் நெத்திமேட்டில் உள்ள லாரி மார்க்கெட்டுகளில் 5-வது நாளாக தொடர்ந்து லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் லாரி டிரைவர்கள், கிளனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். எந்த நேரத்திலும் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதால் அவர்கள் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் பொழுதுபோக்கிற்காக டிரைவர்கள், கிளனர்கள் கபடி விளையாடினர். லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அதன் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகள் பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து அதிகளவு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும். ஆனால் இந்த போராட்டத்தில் இந்த காய்கறிகள் வரத்து உழவர் சந்தைகளுக்கு குறைந்துள்ளன. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

உழவர் சந்தைகளில் நேற்று பீன்ஸ் கிலோ ரூ.52-க்கும், கேரட் ரூ.42-க்கும், பீட்ரூட் ரூ.38-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் வெளிமார்க்கெட்டுகளில் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும், இஞ்சி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பார்சல் அலுவலகம் மூலம் பல்வேறு ஊர்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக வழக்கத்தைவிட 25 சதவீதம் பார்சல்கள் கூடுதலாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான சென்னகேசவன் கூறியதாவது:- லாரிகள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.350 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருமானமின்றி தவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் சுமார் 250 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன.

இவற்றில் பெரிய பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும். ஆனால் வேலைநிறுத்த போராட்டத்தால் தற்போது மாவட்டத்தில் டீசல் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு வரி மூலம் கிடைக்கும் வருவாயிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story