6 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி


6 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
x
தினத்தந்தி 1 Aug 2018 3:15 AM IST (Updated: 31 July 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி நகரில் 6 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,


ஆண்டிப்பட்டி நகரில் அவ்வப்போது, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் குற்ற செயல்களில் ஈடுபடும் ஒரு சில நபர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி விடுகின்றனர்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் நடைபெறும் குற்றசெயல்களை தடுக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீசார் முடிவு செய்து நகரில் அதிகமாக மக்கள் கூடும் 16 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது.


இந்த கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு கேமராவில் பதிவாகும் காட்சிகளை டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்காணிப்பு கேமராக்களை போதிய அளவு பராமரிக்காத காரணத்தால் ஆண்டிப்பட்டி நகரில் அமைக்கப்பட்ட கேமராக்கள் ஒவ்வொன்றாக பழுதடைந்து செயல்படாமல் போனது. இதனால் ஆண்டிப்பட்டி நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக பஸ்நிலையம், மதுரைரோடு, ஏத்தகோவில் ரோடு ஆகிய இடங்களில் ரூ.70 ஆயிரம் செலவில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் விரைவில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ஆண்டிப்பட்டி போலீசார் தெரிவித்தனர். 

Next Story