3 மகன்களுடன் பெண் தற்கொலை: கணவர் உள்பட 3 பேர் கைது


3 மகன்களுடன் பெண் தற்கொலை: கணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே 3 மகன்களுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாயை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி நதியா(30). இவர்களது மகன்கள் சஞ்சய் (12), பூவரசன் (8) மற்றும் நிர்மல் (6). இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நதியா மற்றும் 3 மகன்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். இவர்களின் வாய்கள் துணியால் கட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து லோகநாதன், இவருடைய தந்தை சண்முகம் தாயார் தேவகி ஆகிய 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது லோகநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் லோகநாதனுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதை நதியா கண்டித்ததால் லோகநாதன் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததும், இதற்கு சண்முகம், தேவகி உள்ளிட்ட 5 பேர் உடந்தையாக இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், இவரது தந்தை சண்முகம் (58), தாயார் தேவகி (53) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகநாதனின் தங்கை ரேணுகா, இவரின் கணவர் முருகேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். நதியா உள்ளிட்ட 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். 

Next Story