பசுமை வழிச்சாலை தேவையா?


பசுமை வழிச்சாலை தேவையா?
x
தினத்தந்தி 1 Aug 2018 5:35 AM GMT (Updated: 1 Aug 2018 5:35 AM GMT)

உதயகீதம் என்ற படத்தில் ஒரு வசனம் வரும். ‘ரயில்ல பாம் வைப்பா... பஸ்ல பாம் வைப்பா... தேங்காய்ல பாம் வைப்பாளோ...? ’அதுபோலத் தான் கேட்கத் தோன்றுகிறது.

‘நியூட்ரினோ வேண்டாம் என்றார்கள். மீத்தேன் தேவையா? என்றார்கள். ரோடு கூட போடக்கூடாது என்பார்களா?’ ஏற்கனவே இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூன்றாவது பாதை எதுக்கு என்பது அடுத்த கேள்வி.

அதான் கூரை வீடு இருக்கே; காரை வீடு எதுக்கு எனக் கேட்பார்களோ? என்னவோ.

வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் உரிமை. அதை சாத்தியமாக்கிக் கொடுப்பது, ஒவ்வொரு அரசின் கடமை. தொலை நோக்கு இல்லாத அரசாங்கங்கள் தொலையும் என்பது வரலாறு.

இன்று நாம் பார்க்கும் அத்தனை நெடுஞ்சாலைகளும், வானளாவிய கட்டிடங்களும், பிரமாண்ட பாலங்களும், ஒரு காலத்தில் வனமாகவோ, மலையாகவோ, விளைநிலமாகவோ, யாரோ ஒரு ஏழைக் குடியானவனின் வீடாகவோ இருந்தவை தான்.

கவிஞர் வைரமுத்து பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் வைகை அணைக்குள் மூழ்க வேண்டும்.

ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் மேட்டூர் அணையின் மதகுகளுக்குப் பின்னால் 60 கிராமங்கள் இருந்தன. நன்றாகப் படியுங்கள்; இருந்தன. அதாவது, இன்று இல்லை.

சிங்காரச் சென்னை என்பதும்; சென்னையை சிங்கப்பூராக்குவேன் என்பதும் சும்மா வந்துவிடுமா?

இன்று நாம் பார்க்கும் பெருநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகள், கட்டமைக்கப்பட்டவை.

நன்றாக நினைவிருக்கிறது. நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் பாதாளப் பாதை அமைக்கப்படும் முன், பல குடியிருப்புகள் அங்கிருந்தன. அத்தனையும் அகற்றப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. ஒரே ஒரு வீடு மட்டும், நட்டநடு ரோட்டில் இருந்தது. உச்ச நீதிமன்றம் வரை கடுமையாகப் போராடினார் உரிமையாளர். கடைசியில் பாதை முழுமையடைந்தது.

அவ்வளவு ஏன்? சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைந்திருப்பதே, உலகநேரி என்னும் ஏரியின் மீது தானே!

பக்கத்து மாநிலமான கேரளாவின் முதல்வர், எங்கள் மாநிலத்துக்கு வந்திருக்க வேண்டிய ரெயில் பெட்டி தொழிற்சாலையை, அரியானாவுக்கு கொண்டு சென்றது நியாயமா? என தலைநகர் டெல்லியின் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்.

இங்கு என்னடாவென்றால், தொழிற்சாலைகளை வைத்திருப்பது நியாயமா? என கேட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கூரில் டாடா நானோ தொழிற்சாலையைக் கொண்டுவர முயற்சித்தது அப்போதைய மேற்குவங்க கம்யூனிஸ்டு அரசு. மம்தாவின் எதிர்ப்பு அரசியலால், குஜராத்துக்கு குடிபெயர்ந்தது திட்டம். யாருக்கு நட்டம்?

ஓராண்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றால், 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம். வேலை வேண்டும் என்றால் புதிய புதிய ஆலை வேண்டும். ஆலைக்கு அச்சாரம் சாலை. எங்கே தொழில் தொடங்குவார்கள்? எங்கே துறைமுகமும், விமான நிலையமும், சாலை வசதியும் இருக்கிறதோ அங்கு தான் தொடங்குவார்கள்.

அதனால் தான் கோவையும் தூத்துக்குடியும் தொழில் நகரங்களாகின்றன. சேலம், ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரம் என மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வானில் பறக்க இருக்கின்றன. சாலை வசதியே வேண்டாம் என்பவர்கள், விவசாயிக்கு விமானம் எதற்கு என கேட்பார்களோ என அச்சமாக இருக்கிறது.

காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி என மொத்தம் 6 மாவட்டங்களை சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை இணைக்கிறது. எதிரும் புதிருமாக 8 வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். ஒவ்வொரு 50 கிலோ மீட்டரிலும் ஏ.டி.எம். எந்திரங்கள், கடைகள், கழிவறைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அவசரகால ஊர்திகள், வாகன பரிசோதனைக் கூடங்கள், புறக்காவல் நிலையங்கள் அமைய இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் இவை அமைகின்றன என்றால், சம்பந்தப்பட்ட ஊருக்கும் சேர்த்து தானே!

இந்தத் திட்டத்துக்காக, தனியாரிடம் மொத்தம் எடுக்கப்படப் போவதே 4 ஆயிரத்து 695 ஏக்கர் தான். 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 42 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, நில வங்கியை உருவாக்கியிருப்பதாக, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது, கவனிக்கத்தக்கது. அது 42 ஆயிரம் ஏக்கர்; இது 4 ஆயிரத்து 695 ஏக்கர். இதிலும், ஆயிரம் ஏக்கர் தான் பாசன நிலம். இது, இந்த ஐந்து மாவட்ட பாசனப் பரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு.

இத்தனைக்கும், இந்தியாவிலேயே கடுமையான நிலம் கையப்படுத்தும் சட்டம், தமிழகத்தில் தான் உள்ளது. அந்தச் சட்டத்தின்படி இல்லாமல், சந்தை மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

சேலம் ஆட்சியர் சொன்னதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஹெக்டேருக்கு 21 லட்சம் ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம். மரத்துக்கும், கிணத்துக்கும் கூட தனி இழப்பீடு உண்டு. வீட்டுக்கும், கடைக்கும் இழப்பீடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் கூட இழப்பீடு உண்டு என்பது தெரியுமா? அவ்வளவு ஏன்? வயலிலும், கடையிலும் வேலை பார்ப்பவர்களுக்கும், மூன்று மாத சம்பளம் அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது அதிகமோ இழப்பீடாக வழங்கப்படும். இவை தவிர, அக்கம் பக்கத்து நிலங்களின் சந்தை மதிப்பு அதிகரிக்கும். இணைப்புச் சாலைகளால் புதிய வேகத்தில் வர்த்தகம் வளரும்.

எந்த வனப்பாதுகாப்பு மண்டலத்திலிருந்தும் 10 கிலோ மீட்டர் தூரம் தள்ளி தான் இந்தச் சாலை அமைகிறது. 10 ஆயிரத்துக்கும் குறைவான மரங்கள் வெட்டப்பட உள்ளன. அதற்கு ஈடாக 3 லட்சம் மரங்கள் நடுவோம் என சத்தியம் செய்கிறது மத்திய அரசு. கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதிமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை என எதுவும் தொடப்படாது. இன்னும் சொல்லப்போனால், கஞ்சமலை, கவுதிமலையில் கைவைப்பதற்கு உச்ச நீதிமன்றத் தடையே உள்ளது.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் முதல் அதிவிரைவுச் சாலை இதுவே. இந்தியாவின் ஆறாவது மிகப் பெரிய அதிவிரைவுச் சாலையாகவும் இதுவே இருக்கும். இதன்மூலம், சென்னை-சேலத்தின் பயண தூரம் பாதியாகும். 10.4 கோடி லிட்டர் டீசல் மிச்சமாகும். அதாவது பண மதிப்பில், ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய்!

இந்தப் பாதையில் தற்போது நடக்கும் போக்குவரத்தில் 60 சதவீதம் வேலைக்கும் வியாபாரத்துக்கும் நடக்கிறது. அடுத்ததாக, படிப்புக்காகவும், மூன்றாவதாக கோவில்களுக்கும் சுற்றுலாவுக்கும் பயன்படுகிறது. இவர்களின் பணம் தான் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் மிச்சமாகப் போகிறது.

வளர்ச்சி தான் ஒரு நாட்டின் முதல் முயற்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு வழிகோலுபவை சாலைகள் தான். தொடர் முயற்சிகளின் மூலமாக தான் பல சாதனைகள் சாத்தியமாகி இருக்கின்றன.

நல்ல திட்டங்களுக்கு சாலை வழிவகுக்கும். நல்ல சாலைகளுக்கு நாம் வழிவகுப்போம்.

-அழகிய சிங்கன் 

Next Story