முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்போன் செயலியை பயன்படுத்தி ரோந்து செல்வது எப்படி? வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி


முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்போன் செயலியை பயன்படுத்தி ரோந்து செல்வது எப்படி? வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:00 AM IST (Updated: 4 Aug 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்போன் செயலியை பயன்படுத்தி ரோந்து செல்வது எப்படி? என்பது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுமலை, கார்குடி, தெப்பக்காடு, நெலாக்கோட்டை, மசினகுடி என 5 வனச்சரகங்கள் உள்ளன. காட்டு யானைகள், காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வரும் இந்த வனப்பகுதியை கண்காணிக்கவும், சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த முகாம்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடக்க காலத்தில் இந்த குழுவினர் ரோந்து செல்வதை பதிவேடுகளில் பதிவு செய்து வந்தனர். இதனால் அனைத்து வனப்பகுதிகளிலும் ரோந்து செல்லப்பட்டதா? என்பது கேள்வி குறியாகி வந்தது.

இதனைதொடர்ந்து பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் சுவடு என்ற செயலி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவினரிடமும் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு குழுவினரும் தினந்தோறும் ரோந்து செல்லும் போது அந்த செயலியை ஆன் செய்த பிறகே ரோந்து செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு குழுவினரும் எந்தெந்த வனப்பகுதியில் ரோந்து செல்கின்றனர் என்பதை வனத்துறை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணிக்க முடிந்தது. அத்துடன் 30 நாட்களில் குறிப்பிட்ட வனப்பகுதி முழுவதும் ரோந்து செல்லப்பட்டதா? என்பதையும் கண்காணிக்க முடிந்தது.

இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக நிர்வாகமே எம்.ஸ்டிரைப் என்ற புதிய செயலியை தயாரித்து அதன் மூலம் வனப்பகுதியை கண்காணிக்கும் பணியை நடத்தி வருகிறது. இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்தில் செல்போன் செயலியை பயன்படுத்தி ரோந்து செல்வது எப்படி? என்பது குறித்து சீகூர், சிங்காரா வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு ஊழியர்களுக்கு முதுமலை தெப்பக்காட்டில் உள்ள பயிற்சி அரங்கில் 2 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 18 வேட்டை தடுப்பு முகாமை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 102 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு செல்போன் செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


Next Story