ராணிசென்னம்மா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் காவலர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு போலீஸ் டி.ஜி.பி.க்கு குமாரசாமி உத்தரவு
காவலர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார்.
பெங்களூரு,
ராணிசென்னம்மா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்ததால் காவலர் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார்.
காவலர்கள் நியமன தேர்வுகர்நாடக அரசின் காவலர்கள் நியமன தேர்வு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வர்கள் ராணிசென்னம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூரு வந்தனர். அந்த ரெயில் வடகர்நாடகத்தில் இருந்து பெங்களூரு வந்தது. அந்த ரெயில் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது.
இதை கண்டித்து தேர்வர்கள் தார்வார் மாவட்டம் உப்பள்ளியிலேயே போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நேரம் ஆகிவிட்டதால் அதில் பயணம் செய்த தேர்வர்கள் தேர்வு எழுத முடியவில்லை. இதுபற்றி முதல்–மந்திரியின் கவனத்திற்கு வந்தது. உடனே இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்–மந்திரி குமாரசாமி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விரைவில் தேதி அறிவிப்புஅதில் ரெயில் தாமதமாக வந்ததால், தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பை வழங்கும்படி முதல்–மந்திரி கூறினார். அதைத்தொடர்ந்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்படி போலீஸ் நியமனம் மற்றும் பயிற்சி கூடுதல் டி.ஜி.பி.க்கு, டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்தார். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவலர்கள் நியமன தேர்வு எழுத முடியாதவர்கள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்கும்படி மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். ரெயில் தாமதமாக வந்தது குறித்து ரெயில்வே துறை மந்திரியிடம் புகார் செய்யப்படும். இதுபோன்ற முக்கியமான நேரங்களில் ரெயில் குறித்த நேரத்திற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்படும். உப்பள்ளியில் தேர்வு மையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.