தூத்துக்குடி–கோவில்பட்டி பகுதிகளில் கடையடைப்பு, பஸ்கள் ஓடவில்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடி–கோவில்பட்டி பகுதிகளில் கடையடைப்பு, பஸ்கள் ஓடவில்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 9 Aug 2018 3:00 AM IST (Updated: 8 Aug 2018 7:12 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் கடையடைப்பு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் கடையடைப்பு நடத்தப்பட்டது. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடையடைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்ததையொட்டி, நேற்று மாவட்டத்தில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. அதே போன்று அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயங்கவில்லை. இதனால் தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சாலைகள் வெறிச்சொடின

துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்லும். நேற்று எந்த ஒரு லாரியும் இயங்கவில்லை. ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பரபரப்பாக காணப்படும் துறைமுக சாலை வாகனங்களே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இருந்தது. அதே போன்று தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

அஞ்சலி

மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு உள்ளது. அதே போன்று 500–க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி உருவப்படத்தை வைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பிலும், தி.மு.க. நிர்வாகிகள், ஊர்மக்கள் சார்பிலும் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவில் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்று 2–வது நாளாக கடையடைப்பு நடந்தது. கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் வெறிச்சோடியது. ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன.

மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், வாடகை கார், வேன், ஆட்டோக்கள் இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் அவதிப்பட்டனர். அவர்கள் ரெயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200–க்கு மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், நூற்பாலைகள் மற்றும் பிற நிறுவனங்களும் மூடப்பட்டன. தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இதேபோன்று கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், திருச்செந்தூர், ஏரல், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, நாசரேத், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

அனைத்து ஊர்களிலும் மறைந்த தி.மு.க. தலைவரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. கொடிக்கம்பங்களில் கட்சி கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டனர். திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை, காயல்பட்டினம் கொம்புத்துறை, சிங்கித்துறை, புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story