தி.மு.க.வினர் மொட்டை போட்டு கருணாநிதிக்கு அஞ்சலி


தி.மு.க.வினர் மொட்டை போட்டு கருணாநிதிக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:27 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி விருதுநகர் மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. தி.மு.க. தொண்டர்கள் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

விருதுநகர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று அதிகாலை முதலே தனியார் மற்றும் போக்குவரத்து கழக பஸ்கள் எதுவும் ஓடவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ரெயில் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் விருதுநகர் பஸ் நிலையத்தில் தவிப்புக்குள்ளாகினர்.

மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகளும் சிறு பெட்டிக்கடைகளும் கூட திறக்கப்படவில்லை. ஒரு சில பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. விருதுநகரில் பரபரப்பாக காணப்படும் பழைய பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடியது. மாவட்டம் முழுவதும் ஒரு சில தனியார் வங்கிகளும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், மத்திய அரசு அலுவலகங்களும் செயல்பட்டன. சில இடங்களில் ஏ.டி.எம்.மையங்களும் மூடப்பட்டிருந்தன.

அரசு விடுமுறை அறிவித்ததால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படவில்லை. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மொட்டைபோட்டு மறைந்த தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சாத்தூரில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகர, ஒன்றிய தி.மு.க. சார்பாக கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிர்வாகிகள், தொண்டர்கள் 22 பேர் சாத்தூர் முக்குராந்தலில் மொட்டை போட்டு தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுபட்டி தி.மு.க. கிளை சார்பில் தொண்டர்கள் மொட்டை போட்டனர். தாயில்பட்டி அருகிலுள்ள சத்திரப்பட்டியில் கிளை செயலாளர் சவுடுராஜ் தலைமையில் 3 பேர் மொட்டை போட்டார்கள்.

விருதுநகர் கம்மாபட்டியில் 4 பேரும், ராஜபாளையத்தில் 10 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 30 பேரும், மத்தியசேனை கிராமத்தில் 2 பேரும் மொட்டை போட்டனர். மாவட்டம் முழுவதும் நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகம்பங்களில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

அருப்புக்கோட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தாயில்பட்டியில் கிளை செயலாளர் சந்தனம் தலைமையில் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவகாசி நகரில் எந்த கடையும் திறக்கப்படவில்லை. பால்பாக்கெட் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஊருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மினி பஸ்கள் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவைகள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று அந்த பகுதி மயான அமைதியாக காணப்பட்டது.

சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுக்க வெளியூர் வியாபாரிகள் வந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று சிவகாசியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அச்சகங்கள் இயங்கவில்லை. இதனால் நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெட்ரோல் நிலையங்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

கூமாபட்டி கிராமத்தில் நகர செயலாளர் கருணைஈஸ்வரன் தலைமையில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடத்தினர். இது போன்று விருதுநகர் அருகே சூலக்கரையில் கிளை செயலாளர் நாகராஜன் தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர்,சாத்தூர், அருப்புக் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் நடந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். ரெயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆம்னி பஸ்களும் இயங்கவில்லை.

Next Story