ராணுவ மேஜரின் மரண சோகத்திலும் பா.ஜனதாவினர் பிறந்த நாள் கொண்டாடியதால் சர்ச்சை


ராணுவ மேஜரின் மரண சோகத்திலும் பா.ஜனதாவினர் பிறந்த நாள் கொண்டாடியதால் சர்ச்சை
x
தினத்தந்தி 10 Aug 2018 5:38 AM IST (Updated: 10 Aug 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ மேஜர் வீரமரணம் அடைந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரான பயந்தர் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த சோகத்திலும் பா.ஜனதாவினர் பிறந்த நாள் கொண்டாடி சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.

மும்பை,

ஜம்மு- காஷ்மீர் பந்திராபோர் மாவட்டம் குரேஸ் பகுதியில் 2 நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் மும்பையை அடுத்த பயந்தரை சேர்ந்த ராணுவ மேஜர் கவுஸ்துப் பிரகாஷ் குமார் ரானே (வயது29) வீர மரணம் அடைந்தார்.

ராணுவ மேஜரின் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊரான பயந்தருக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இறுதி ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து அரசு முழு மரியாதையுடன் அவரது உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ராணுவ மேஜர் உயிரிழப்பால் பயந்தர் பகுதியே சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில், அவரது உடல் பயந்தருக்கு கொண்டு வரும் முன்பு மிரா பயந்தர் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் ஆனந்த் மஜ்சரேக்கரின் பிறந்தாள் விழா அமர்க்களமாக நடந்துள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மற்றும் 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்ட காட்சிகள் மராத்தி டி.வி. சேனல் ஒன்றிலும் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் பிறந்தநாள் கொண்டாட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்தது என கூறியுள்ளார்.

ராணுவ மேஜர் பலியான செய்தி தெரிந்தும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்களை பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் வலியுறுத்தி உள்ளார். 

Next Story