பழனியில், கோவில் திருவிழாவில் பரபரப்பு: அதிக ஒளித்திறன் கொண்ட மின்விளக்குகளால் 510 பக்தர்களுக்கு கண் எரிச்சல்


பழனியில், கோவில் திருவிழாவில் பரபரப்பு: அதிக ஒளித்திறன் கொண்ட மின்விளக்குகளால் 510 பக்தர்களுக்கு கண் எரிச்சல்
x
தினத்தந்தி 19 Aug 2018 12:11 AM GMT (Updated: 19 Aug 2018 12:11 AM GMT)

அதிக ஒளித்திறன் கொண்ட மின்விளக்குகளால் 510 பக்தர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

பழனி,

பழனியில், கோவில் திருவிழா கலைநிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளித்திறன் கொண்ட மின்விளக்குகளால் 510 பக்தர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதுதாராபுரம் சாலையில் ஜவகர்நகர் உள்ளது. இங்குள்ள மதுரை வீரன், பட்டகாளியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக கோவில் அருகே மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மேடையை சுற்றிலும் அதிக ஒளியை பரப்பும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பார்த்து ரசித்தனர். அதன் பின்னர் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தூங்கினர்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் எழுந்த போது, கண்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

பெரும்பாலானவர்களுக்கு கண்களில் சொட்டு மருந்து விடப்பட்டது. பின்னர் ஊசி மூலம் மருந்துகளும் செலுத்தப்பட்டது. அதன் பின்னரே பக்தர்களுக்கு கண் எரிச்சல் குறைந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சிலருக்கு மட்டும் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை தலைமை டாக்டர் விஜயசேகரிடம் கேட்டபோது, கண் எரிச்சல், வீக்கம் போன்ற பாதிப்பால் ஜவகர்நகரில் இருந்து மொத்தம் 510 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களில் 120 பேர் பெண்கள், 210 பேர் ஆண்கள், 180 குழந்தைகள் ஆவர். கலை நிகழ்ச்சியின் போது அதிக ஒளியை பரப்பும் மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால் கண்எரிச்சல் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் 502 பேர் வெளி நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று சென்றுவிட்டனர். 8 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். கோவில் திருவிழாவில் அதிக ஒளித்திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால் 510 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story