குற்ற செயல்களில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


குற்ற செயல்களில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 6:44 PM GMT)

கொள்ளிடம் அருகே குற்ற செயல்களில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எருக்கூர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஒருவரை மட்டும் போலீசார் விரட்டி பிடித்தனர். அவர் வைத்திருந்த ஒரு பையில் 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தன.

இதனை தொடர்ந்து பிடிப்பட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கலைவாணன் (வயது30) என்பதும், தப்பி ஓடியவர்கள் திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த பாடலீஸ்வரன் (42), எருக்கூரை சேர்ந்த மோகன்தாஸ் மகன் விஜய் (23) என்பதும், இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாடலீஸ்வரன், விஜய் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கலைவாணனிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை எருக்கூர் கிராமத்தில் உள்ள ஒரு திடலில் பாதுகாப்பாக வைத்து அதனை சுற்றி மணல் மூட்டைகளை போலீசார் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுகள், திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழக்க செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், வெடிகுண்டுகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story