4 வழிச்சாலையில் மறுபுறம் பாய்ந்த கார், லாரி மீது மோதியது: 2 பேர் பலி
4 வழிச்சாலையில் வந்த போது நிலைதடுமாறி மறுபுறம் பாய்ந்த கார், எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் அந்த காரில் வந்த என்.எல்.சி. அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை,
தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் ஜான்மோசஸ் (வயது 45), குமார் (49). இவர்களில் ஜான்மோசஸ் தூத்துக்குடியில் உள்ள என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அனல் மின்நிலையத்தில் மின் நிலைய உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கார் டிரைவர் குமார்.
இந்த நிலையில் ஜான்மோசஸ் புதுச்சேரியில் தனது நிறுவனம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு திரும்பினார். காரை குமார் ஓட்டி வந்தார்.
கார் மதுரை அருகே மேலூரை அடுத்த நரசிங்கம்பட்டி துணை மின் நிலையம் அருகே 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையின் மறுபக்கம் பாய்ந்து, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், ஜான்மோசஸ், குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மோதிய வேகத்தில் காரும் உருக்குலைந்து போனது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஜான்மோசஸ், குமார் ஆகிய 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.