கேரளாவுக்கு ரூ.75 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் கணேஷ் அனுப்பி வைத்தார்


கேரளாவுக்கு ரூ.75 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் கணேஷ் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:00 PM GMT (Updated: 21 Aug 2018 9:23 PM GMT)

புதுக்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் கணேஷ் அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை,

கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக தங்களின் வீடு, குடும்ப ஆதாரம் உள்ளிட்டவற்றை இழந்து வாடும் கேரள மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உணவு, பால், குடிநீர் உள்பட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரசுத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு கொடியசைத்து அதனை அனுப்பி வைத்தார்.

இதில் அரிசி, சர்க்கரை, டீ, தூள், ரவை, தண்ணீர் பாட்டில்கள், எண்ணெய், புதிய உடைகள், போர்வைகள் உள்பட பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் கலெக்டர் கணேஷ் முன்னிலையில் லாரிகளில் ஏற்றப்பட்டு, நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட அரசுத்துறை அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் வெள்ள நிவாரண உதவியை வழங்கி உள்ள அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கணேஷ் நன்றி தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தாமரை, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story