பந்தயத்திற்கு ஏற்ற டி.வி.எஸ். ‘என் டார்க்’
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் திகழும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் பந்தயத்தில் பங்கேற்கும் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது.
டி.வி.எஸ். ‘என் டார்க்’ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த ஸ்கூட்டர் இளைஞர்களைக் கவரும் என்பதில் வியப்பில்லை.
நாசிக்கில் நடைபெற்ற இந்திய தேசிய ரேலி சாம்பியன் பட்டப்போட்டியின் நான்காவது சுற்றில் டி.வி.எஸ். என் டார்க் எஸ்.எக்ஸ்.ஆர். ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் செயல்பாடுகளைக் கணிக்க முடியும்.
மூன்று முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஆசிப் அலி மற்றும் ஷமிம் கான் ஆகியோர் இந்த ஸ்கூட்டரை ஓட்டினார்கள்.
டி.வி.எஸ். என் டார்க் எஸ்.எக்ஸ்.ஆர். ரக ஸ்கூட்டர்கள் 125 சிசி திறன் கொண்டது. நான்கு ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டிருப்பதோடு 20 பிஹெச்பி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஸ்ஓஹெச்சி என்ஜினைக் கொண்டுள்ளது.
பந்தயங்களுக்கு ஏற்ற வகையில் 12 அங்குல டயர்கள் மற்றும் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனைக் கொண்டது. அதேபோல மோட்டார் பந்தயத்திற்கு ஏற்ப இதன் சைலன்சரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தயத்திற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளதால் இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டராகும்.
ரேஸ் பிரியர்களுக்கு மட்டுமின்றி சாதாரண உபயோகத்துக்கும் என் டார்க் வாங்கலாமே என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளது. இதற்குக் காரணம் இந்த ஸ்கூட்டரில் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள்தான்.
வழக்கமான அலுவலகம், கல்லூரி செல்வதற்கு பயன்படுத்துவோருக்காக என் டார்க் 125 என்ற மாடல் வந்துள்ளது. இதில் சாதாரண சாலைகளுக்கு ஏற்ப வழக்கமான டியூப்லெஸ் டயர்கள் உள்ளன.
டிஜிட்டல் தொழில்நுட்ப பிரியர்களுக்கு ஏற்ப இது ஸ்மார்ட்போன் இணைப்பு கொண்டதாக உள்ளது. முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் காரில் உள்ளதைப் போன்று ‘பார்கிங்க் அசிஸ்ட்’ உள்ளிட்ட பல வசதிகள் இதிலும் உள்ளன.
ஸ்மார்ட்போன் இணைப்பு என்பது இதற்காக உள்ள செயலி (ஆப்) டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு இதில் செல்லும்போது, உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அழைப்பு வந்தால் அது டாஷ்போர்டில் உள்ள ஸ்பீடா மீட்டர் அருகில் சமிக்ஞை எழுப்பும். அப்போது, ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்பதை நீங்கள் தேர்வு செய்தால், உங்களை அழைப்ப வருக்கு அதை குறுந்தகவலாக அனுப்பிவிடும். அல்லது ‘வாகனத்தில் செல்கிறேன், திரும்ப அழைக்கிறேன்’ என்ற செய்தியை பதிவு செய்திருந்தால் அதை அனுப்பிவிடும்.
உங்கள் நண்பர் ஸ்கூட்டரை இரவல் வாங்கிச்செல்வதாக வைத்துக்கொள்வோம். அவர் வேகமாக வண்டியை ஓட்டுவார் என்ற அச்சம் இருந்தால், ஸ்கூட்டரை கொடுக்கும்போதே உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகத்தை தீர்மானித்து விடலாம். இதனால் அவர் குறிப்பிட்ட அளவைத்தாண்டி வேகமாக சென்றால் உங்கள் போன் எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
2014-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த என்டார்க் தற்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளது.
என் டார்க் மாடல் உத்தேச விலை ரூ. 62,825 ஆகும்.
Related Tags :
Next Story