விரும்பிய வகையில் காரை வடிவமைக்கலாம் டாடா மோட்டார்ஸ் அறிமுகம்


விரும்பிய வகையில் காரை வடிவமைக்கலாம் டாடா மோட்டார்ஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:54 PM IST (Updated: 22 Aug 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ‘டூ இட் யுவர்செல்ப்’ என்ற சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது.

புதுப்புது கார்களை தயாரித்து கார் பிரியர்களை குஷிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது மற்றொரு சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் பெயர் ‘டூ இட் யுவர்செல்ப்’. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் கார் வடிவமைப்பாளர்களாக மாறலாம்.

இந்த சலுகையின் மூலம் புதிதாக வாங்கும் கார்களில் நமக்கு தேவையான மாற்றங்களை இனி நாமே தெரிவிக்க முடியும். குறிப்பாக காரின் வடிவம், பிரேக், உள்புற வடிவமைப்பு, நிறம் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம்.

டாடாவின் புதிய வரவான ஹாரியர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவர உள்ளது. 5 பேர் பயணிக்கும் வகையிலான இந்த எஸ்.யு.வி. மாடலில் நமக்கு தேவையான மாற்றங்களை நாமே செய்து கொள்ளும் வசதியை தருகிறார்கள்.

இதற்கென காரின் முப்பரிமாண தோற்றத்தை விளக்கும் பிரத்யேக செயலி ஒன்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. டாடா மோட்டார்ஸின் பொறியியல் குழு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள டாடா மோட்டார்ஸின் ‘இ-குரு’ செயலியைப் போன்று அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படக் கூடியதாக இருக்கும்.

இதேபோல டாடா நிறுவனத்தின் மற்றொரு மாடலான நெக்ஸான் காரையும் வாடிக்கையாளரின் விருப்பப்படி வடிவமைத்து கொடுக்க இருக்கிறார்கள். இதன் மூலம் காரின் பவர் டிரெய்ன், பிரேக், சஸ்பென்ஷன் வகைகள், இருக்கைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்த செயலியில் இடம்பெறும்.

அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை குறிப்பிட்டு, இந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து, காரை முன்பதிவு செய்தால்... வாடிக்கையாளரின் விருப்பப்படி கார் டெலிவரிக்கு கிடைக்கும்.

அப்ளிகேஷனில் வாடிக்கையாளர் பதிவு செய்த விவரங்கள், டாடா மோட்டார்ஸின் உற்பத்தி ஆலைகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் கார் தயாரிக்கப்படுவதால், வாடிக்கையாளருக்கு பிடித்தமான காராகவே விற்பனையகத்திற்கு வந்து சேருகிறது. மேலும் கார் எத்தனை நாளில் தயாரிக்கப்படும், எப்போது டெலிவரிக்கு கிடைக்கும் போன்ற விவரங்களையும் அந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதால், கார் தாமதமாக டெலிவரி செய்யப்படுமோ...? என்று யோசிக்க வேண்டாம். ஏனெனில் முன்பதிவு செய்யப்பட்ட கார்களை எத்தனை நாட்களில் டெலிவரிக்கு கொடுக்கிறார்களோ, அதே கால அளவில் இந்த கார்களும் டெலி வரிக்கு கிடைத்துவிடும். எனவே மாற்றங்களுடன் தயாராகும் காருக்கு கூடுதல் காலம் ஆகாது என்று கூறுகிறார்கள்.

வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜேந்திர பெட்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தங்கள் வாகன விற்பனை உயரும் என்று டாடா மோட்டார்ஸ் நம்புகிறது.

வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யும் இந்த மாடல், ஒமேகா வடிவமைப்பு என்ற அடிப்படையில் செயல்படுத்த உள்ளனர். ஒரு பிரிவில் ஒரு குறிப்பிட்ட மாடல் காரை மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலை மாறி பலதரப்பட்ட காரையும் தயாரிக்கலாம் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஒமேகா வடிவமைப்பாகும்.

Next Story