குன்னத்தூர் அருகே கார்-சரக்கு ஆட்டோ மோதல்; 2 பேர் பலி


குன்னத்தூர் அருகே கார்-சரக்கு ஆட்டோ மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2018 10:00 PM GMT (Updated: 22 Aug 2018 9:42 PM GMT)

குன்னத்தூர் அருகே கார்-சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

குன்னத்தூர், 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் (வயது 33). அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர்கள் முனீஸ் (32), பிரவீன் குமார் (33) மற்றும் சுப்பிரமணி (40). இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெறும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ஒரு காரில் 4 பேரும் திருப்பூரில் இருந்து கோபி சென்றனர். பின்னர் அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, நேற்று இரவு திருப்பூர் திரும்பினார்கள்.

காரை சுப்பிரமணி ஓட்டினார். காரில் ஜெகநாதன், முனீஸ், பிரவீன் குமார் அமர்ந்து இருந்தனர். இந்த கார் கோபி-குன்னத்தூர் சாலையில் நெட்டிச்சிபாளையம் பிரிவு அருகே இரவு 8.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ஆட்டோ ஒன்று கோபி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை குன்னத்தூரை சேர்ந்த சின்னச்சாமி (40) ஓட்டினார். கண் இமைக்கும் நேரத்தில் காரும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த பயணிகள் 3 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர், சரக்கு ஆட்டோ டிரைவர் மற்றும் பயணிகள் 3 பேர் என மொத்தம் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அருகில் உள்ள பொதுமக்களும், குன்னத்தூர் போலீசாரும் விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த ஜெகநாதன், முனீஸ், பிரவீன்குமார், சுப்பிரமணி மற்றும் சரக்கு ஆட்டோ டிரைவர் சின்னச்சாமி மற்றும் பஸ்சுக்காக காத்து நின்ற 3 பேர் என மொத்தம் 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெகநாதனும், முனீசும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மற்ற 6 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்ததோடு, சரக்கு ஆட்டோவும் நொறுங்கி சின்னாபின்னமானது.

இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான கார் மற்றும் சரக்கு ஆட்டோவை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பஸ்சுக்காக காத்து நின்ற 3 பேர் பற்றிய விபரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். குன்னத்தூர் அருகே நேற்று இரவு கார்-சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story