திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா குடிநீர் வழங்க கோரிக்கை


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 AM IST (Updated: 4 Sept 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள தியாகராஜபுரம் ஊராட்சி நாகக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி காலிக்குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க நேற்று வந்தனர். அப்போது பெண்கள் திடீரென காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்கள், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரடாச்சேரி ஒன்றியம் தியாகராஜபுரம் ஊராட்சி நாகக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்துக்கு ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story