ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது


ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2018 4:30 AM IST (Updated: 8 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி டி.பி. ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். வெல்லமண்டி வைத்துள்ளார். இவர் மாவட்ட மைய நூலகம் எதிரில் ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடையை வாடகைக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் அந்த கடையை வாடகைக்கு பெற்று தருவதாகவும், அதற்காக ரூ.15 ஆயிரத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மனுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகத்தின் பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தி (வயது 32) என்பவர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயக்குமார் இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுப்பதற்காக ஜெயக்குமார் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு ஜெயக்குமாரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றபோது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கையும், களவுமாக பிடித்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்த சம்பவம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story