ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் மண் சரிவு
ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தை வளமாக்கும் கீழ்பவானி வாய்க்கால் அனைத்து பகுதிகளிலும் பாய்ந்து ஓடி வருகிறது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் கரைபுரண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
ஈரோடு அருகே பெருந்துறை ரோடு வாய்க்கால் மேடு வழியாக மெயின் வாய்க்கால் செல்கிறது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்காலில் நேற்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது.
ஈரோட்டை அடுத்து உள்ள காஞ்சிக்கோவில் உள்வட்டம் திருவாச்சி கிராமம் சூலக்கத்தான்வலசு பகுதியில் ஒரம்புக்காடு என்ற பகுதியில் ஒரு தரை மட்ட மதகு உள்ளது. இந்த மதகை ஒட்டி சுமார் 10 மீட்டர் அளவுக்கு கல்லால் தரைமட்ட மதில் சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த மதில்சுவரில் நீண்ட நாட்களாக வெடிப்பு இருந்த பகுதியில், தண்ணீர் நனைத்து ஈரமாகியதால் நேற்று அதிகாலை மண் சரிந்தது. அப்போது அந்த பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுபோல் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் தாமோதரன், உதவி பொறியாளர் தினகரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பெருந்துறை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
வாய்க்கால் கரையில் ஏற்பட்ட மண்சரிவால் உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல்மூட்டைகள் அடுக்கி சரிசெய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அந்த பகுதி சரிசெய்யப்பட்டது.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மதகின் சுவர்பகுதி மிகவும் பழமையானது. அது எதிர்பாராதவிதமாக பெயர்ந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தண்ணீரின் அளவு குறைக்கப்படாமல் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு எதுவும் இருக்காது. தண்ணீர் பாசன காலம் முடிந்ததும் அங்கு உறுதியாக சுவர் கட்டும் பணி நடைபெறும்’ என்றார்கள்.