தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,296 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.4 கோடியே 67 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது
புதுவையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,296 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.4 கோடியே 67லட்சத்து 66ஆயிரத்து 167 இழப்பீடாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி,
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான ரஞ்சன் கோகாய் உத்தரவுபடியும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான ஹீலுவாடி ஜீ.ரமேஷ் வழிகாட்டுதலின்படி புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
இதன் தொடக்க விழாவிற்கு புதுச்சேரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவரும், தலைமை நீதிபதியுமான தனபால் தலைமை தாங்கி கோர்ட்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலாளரும், மாவட்ட நீதிபதி சோபனாதேவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், புதுச்சேரி முதன்மை சார்புநிலை நீதிபதியுமான எழிலரசி மற்றும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு அமர்வும் நடந்தது.
இதில் சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன்–மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் என நிலுவையில் உள்ள மொத்தம் 5,991 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,296 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4கோடியே 67லட்சத்து 66ஆயிரத்து 167 இழப்பீடாக வழங்கப்பட்டது.