வையம்பட்டி அருகே வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்


வையம்பட்டி அருகே வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 9 Sept 2018 5:51 AM IST (Updated: 9 Sept 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி வையம்பட்டி அருகே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்து போய் விட்டதால் விவசாய பணிகள் தடைபட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியில் கழுதைகளுக்கு(பஞ்ச கல்யாணி) திருமணம் நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, அந்த பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. நேற்று காலை கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு ஆண், பெண் கழுதையை மணமக்கள் போல் அலங்கரித்து மாலை அணிவித்து கோவில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

பின்னர், மழை வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் பெண் கழுதையின் கழுத்தில் தாலி கயிறு கட்டப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள் அர்ச்சனை தூவி கழுதைகளை வணங்கினர்.

அதைத்தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் வழக்கமாக மணமக்கள் வீட்டாருக்கு மொய் செய்வது போல மொய் வைத்து விட்டு சென்றனர். மணியாரம்பட்டியில் மழை பொய்த்து விட்டால் இதுபோன்று பஞ்ச கல்யாணிகளுக்கு திருமணம் நடத்துவது அவ்வப்போது நடைபெறும் என்றும், அப்படி நடைபெறும் காலங்களில் மழை பெய்யும் என்றும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு வினோத திருமணம் நடைபெற்றதுடன், அறுசுவை விருந்தும் வைத்து கிராம மக்கள் கலக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story