சிந்தாதிரிப்பேட்டையில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றம்


சிந்தாதிரிப்பேட்டையில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:30 AM IST (Updated: 12 Sept 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்துபோனார். இதுதொடர்பான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் தெருவைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முன்பு வாடகைக்கு குடியிருந்தார். வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்தியதால், கற்பகம் வீட்டை காலி செய்துவிட்டு வந்ததாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த கற்பகத்தின் தலையில், வீட்டு உரிமையாளர் மோசஸ் சுத்தியலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயம் அடைந்த கற்பகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். வீட்டு உரிமையாளர் மோசஸ் கைது செய்யப்பட்டார்.

பரிதாப சாவு

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கற்பகம் நேற்று பரிதாபமாக இறந்துபோனார். இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு நேற்று கொலை வழக்காக மாற்றப்பட்டது. இறந்துபோன கற்பகத்திற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது கணவர் பெயர் பெருமாள் என்பதாகும்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் மோசஸ் ஏற்கனவே, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கற்பகத்தை சுத்தியலால் தாக்கியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மோசஸ் வாக்குமூலம்

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், எனது மனைவி சுகுணாவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நாங்கள் அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வோம். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த கற்பகம் நாங்கள் சண்டை போடும்போதெல்லாம் சமாதானம் செய்வார். ஒரு கட்டத்தில் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதற்கு கற்பகமே காரணம் என்று நான் நினைத்தேன். இதனால் கற்பகத்தோடு தகராறு செய்தேன். அவர் வசித்த வீட்டை விட்டு காலி செய்து அனுப்ப முடிவு செய்தேன்.

இதற்காக வேண்டுமென்றே வீட்டு வாடகையை உயர்த்தினேன். இதனால் கற்பகம் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும் அவர் மீதான கோபம் அடங்கவில்லை. இதனால் கற்பகத்தை சுத்தியலால் அவரது தலையில் தாக்கினேன்.

இவ்வாறு மோசஸ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story