தண்ணீர் இல்லாமல் 5 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யக்கூடிய நெல் நாற்றுகள் கருகின


தண்ணீர் இல்லாமல் 5 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யக்கூடிய நெல் நாற்றுகள் கருகின
x
தினத்தந்தி 11 Sep 2018 10:15 PM GMT (Updated: 11 Sep 2018 8:57 PM GMT)

வாய்க்கால்கள் தூர்வாராததால் தண்ணீர் இல்லாமல் 5 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யக்கூடிய நெல் நாற்றுகள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுகளில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணியை தொடங்கினர்.

விதைநெல்லை வாங்கி நாற்றுகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததால் காவிரி, வெண்ணாற்றில் ஆரம்பத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. இதனால் குடமுருட்டி, வெட்டாறு ஆகியவற்றில் தண்ணீரின் அளவு குறைந்தது.

இதன்காரணமாக கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. தஞ்சையை அடுத்த திருவையாறு பகுதிகளில் நடவு செய்வதற்காக தயார் செய்யப்பட்ட நாற்றுகள் கருக தொடங்கின. நாற்றுகளை காப்பாற்றுவதற்காக வீடுகளில் இருந்து குடங்களில் பெண்கள் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றியும் நாற்றுகளை காப்பாற்ற முடியவில்லை. திருவையாறு தாலுகா கீழத்திருப்பூந்துருத்தி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த நடராஜனுக்கு சொந்தமாக மேலத்திருப்பூந்துருத்தியில் விளைநிலம் உள்ளது. இங்கு 9 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றுகளை தயார் செய்து இருந்தார்.

தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் நாற்றுகள் முழுவதும் கருகிவிட்டன. இந்த ஆண்டும் சாகுபடியை செய்ய முடியாமல் போய்விட்டதே என்று நடராஜன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் முழுமையாக சாகுபடி செய்யவில்லை. இந்தநிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக தட்கல் முறையில் உடனடியாக மின் இணைப்பு பெற ரூ.2¾ லட்சம் செலுத்தினேன். எனது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த தங்க சங்கிலியை அடகு வைத்து இந்த பணத்தை செலுத்தினேன். இந்தநிலையில் பருவமழையின் காரணமாக கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி எந்திர நடவு செய்ய நீண்டகால ரகமான சி.ஆர்.1009 என்ற நெல்விதையை விதைத்து நாற்றுகளை வளர்த்தேன். வாய்க்காலில் வந்த தண்ணீரை டீசல் என்ஜீன் மூலம் இறைத்து உழவு பணிகளை மேற்கொண்டேன்.

தற்போது வாய்க்காலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. வாய்க்காலை முறையாக தூர்வாரி இருந்தால் போதுமான தண்ணீர் கிடைத்து இருக்கும். தண்ணீரும் இல்லை. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக நாற்றுகள் முழுவதும் கருகிவிட்டன. என்னால் தொடர்ந்து சாகுபடி செய்ய முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இனிமேல் அரசையோ, அரசின் அறிவிப்பையோ நம்பி வாழ்வதைவிட சாவதே மேல் என எண்ணுகிறேன்.

மின் இணைப்புக்கு கட்டிய தொகையை மின்சார வாரியத்திடம் இருந்து பெற்று என் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் அலுவலகத்திற்கு வராததால் மனு கொடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த சுகுமாரன் கூறும்போது, திருவையாறு பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரவில்லை. ஆறுகளில் தண்ணீர் சென்றதை நம்பி சாகுபடி செய்வதற்காக நாற்றுகள் தயார் செய்யப்பட்டன. ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நாற்றுகள் கருகிவிட்டன. 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான நாற்றுகள் கருகிவிட்டன. உழவு செய்த வயல்களிலும் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டன. இதனால் இந்த ஆண்டும் சாகுபடி செய்ய முடியாதோ? என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பிலும் தண்ணீர் முழுமையாக வழங்கப்படும் என்றோ, குறுகிய கால ரகத்தை சாகுபடி செய்யுங்கள் என்றோ பரிந்துரை செய்ய மறுக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

Next Story