பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்கு?


பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்கு?
x
தினத்தந்தி 11 Sep 2018 11:30 PM GMT (Updated: 11 Sep 2018 10:16 PM GMT)

பரங்கிமலை ரெயில் விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

புதிய திருப்பம்

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

15-ந் தேதி மீண்டும் விசாரணை

இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story