தமிழர் வரலாறு சொத்தா? சொத்தையா?


தமிழர் வரலாறு சொத்தா? சொத்தையா?
x
தினத்தந்தி 12 Sep 2018 4:59 AM GMT (Updated: 12 Sep 2018 4:59 AM GMT)

வீட்டுக்கு எப்படி பத்திரம் என்னும் ஆவணம் தேவையோ, அது போன்று ஒரு நாட்டுக்கும் வரலாறு அடிப்படையான தேவையாகும்.

ஒரு நாட்டை அழிக்கப் படை பட்டாளம் தேவையில்லை. அதன் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்தால் போதும். அந்த மக்கள் தாமாகவே பிறருக்கு அடிமை ஆகி விடுவார்கள்.

அத்தகைய நிலை எப்போதும் வரக்கூடாது என்பதற்காகவே அகவாழ்க்கையை இலக்கியமாகவும், புற வாழ்க்கையை கோட்டை கட்டி போர் பயிற்சி பெறும் வீர வாழ்க்கையாகவும் தமிழர்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைத்துக்கொண்டார்கள். பண்பாட்டைப் போற்றிக் காக்கும் இசையும் நாடகமும் சேர்த்து முத்தமிழாக வளர்த்தார்கள். அதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மூவேந்தரின் ஆட்சி நிலைத்து நீடித்தது.

இளைஞர்களுக்கு ஏர் உழவும் போர் புரியவும் பயிற்சி அளித்தனர். ஏரும் போரும் இணைபிரியாது என்னும் பழமொழி தோன்றியது. மன்னன் பெரிய படையை வைத்துக்கொண்டு செலவு செய்ய வேண்டியதில்லை. போர்ப்பறை அறைந்தால் போதும், வீட்டுக்கு ஒரு வீரன் நாட்டுக்கு உயிர் கொடுக்க ஓடி வருவான்.

போர்க்களத்தில் வேறு யாரும் புண்படாத வகையில், பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, போர் தொடங்குவார்கள். இத்தகைய சிறந்த போர் முறை எந்த நாட்டிலும் இருந்ததில்லை. அதனால்தான் தமிழர்கள் வரலாற்றை தமிழரின் தனிச் சொத்து என்கிறோம்.

இன்றைய தமிழர் வரலாறு சொத்தையாக இருக்கிறதே என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். உடல்நலம் குறைந்தால், தக்க மருந்தும் சத்துணவும் கொடுத்து தேற்றுவது போல, ஏற்றமான வாழ்விலிருந்து தாழ்ந்த தமிழனை மீண்டும் உலக அரங்கில் உயர்த்துவதற்கு பழந்தமிழரின் வரலாற்று ஏணி துணை புரிய காத்திருக்கிறது. தமிழனை விழிப்படையச் செய்வதற்கான வரலாற்று விடிவெள்ளிச் சான்றுகள் சிலவற்றை நாம் அறிவது நலம்.

தமிழனா, ஒற்றுமை இல்லாதவன் என்கிறார்கள். வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். ஒடிசா மாநிலத்தில் அத்திகும்பா கல்வெட்டில் தமிழர்கள் 1,300 ஆண்டுகளாக ஒற்றுமை உடன்படிக்கை (கி.மு. 1500 முதல் கி.மு.217) செய்துகொண்டு, வடநாட்டுப் படைகளை வீழ்த்தினார்கள். அந்த உடன்படிக்கை முடிவுற்றதால், மூவேந்தர்கள் ஒற்றுமை உடைபட்டது.

கி.மு. 217 முதல் கி.மு. 57 வரை பாண்டியர் ஆட்சி நடைபெறவில்லை. இந்த இருண்ட காலத்தில், ஆரியர்களின் வேள்விமுறை தோன்றி, தமிழர் நூல்கள் அழிந்தன. கி.மு. 57-ல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தமிழ்ச் சங்கத்தை மீட்டமைத்தான். சங்க நூல்கள் தொகுக்கப்பட்டன. இதனை, நன்குடி வேளாளர் வரலாறு செய்யுள் நூல் குறிப்பிடுகிறது.

உலக வரலாற்றில் ஒரே அரச குடும்பம் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்ததில்லை. தமிழ் மூவேந்தர்கள் தவிர, வேறு மன்னர்கள் தமிழகத்தை சங்க காலத்துக்கு முன்பு, ஆட்சி புரிந்ததில்லை. வெள்ளை இனத்தவர் கருப்பு இனத்தவரை கொத்தடிமையாக்கினர். ஆனால் தமிழர் வரலாற்றில் தமிழ் வேந்தர்களின் அரண்மனையில் கிரேக்க நாட்டு யவணர்கள் அரண்மனை காவலர்களாக இருந்தார்கள்.

தமிழ் இனத்தை உயர்ந்த பண்பாடு உடைய இனமாகவே கட்டிக் காப்பதற்கு மன்னன் தன் முதல் கடமையாக எல்லோருக்கும் கல்வி அளித்தான். குறமகள் இளயெயினி கூட சங்கப் புலவராக இருந்தார். இலக்கியம் பண்பாட்டைக் காத்தது. இசைத்தமிழ் அனைத்து உயிர்களையும் கவர்ந்தது. நாடக தமிழ் பிற மொழியாளருக்குத் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை புலப்படுத்தியது.

கி.மு. 3 ஆயிரம் ஆண்டு அளவில் இந்தியாவில் கரும்பு இருந்தது என்று ஆங்கிலக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. அதே காலத்தில் தான் அதியன்சேரல் என்னும் இளவரசன் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து முதன்முதல் கரும்பைக் கண்டு பிடித்து பயிராக்கினான். அந்த கரும்பை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினான். அவ்வையாரும் இதைப் புறநானூற்றில் பாடி இருக்கிறார்.

மொரீசியஸ் நாட்டில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்த பிரஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் வாஸ்கோட காமாவுக்கு வழிகாட்டி, சேரக் கடற்கரைக்கு அழைத்து வந்தவன், மாலுமி கணக்கன் என்னும் தமிழனே என்றும் பழங்காலத்தில் உலகின் பல்வேறு துறைமுகங்களில் வாழ்ந்த கப்பலைப் பழுது பார்ப்பவர்களும் ஆழ்கடல் பயணத்துக்கு வழிகாட்டிகளும் தமிழராகவே இருந்தனர் என்றும் தெரிவித்தார்.

ரோம் நாட்டு தங்கக் கட்டிகளைச் சேர நாட்டு மிளகுக்காக கப்பல் ஏற்றி அனுப்பி ரோம் நாட்டு செல்வம் வறண்டுவிட்டது என அவர்கள் புலம்பிய காலமும் ஒன்று இருந்தது.

மிகப் பழங்காலத்தில் மற்ற நாடுகளை வென்று அடக்கியாள தமிழ்ச் சான்றோர் ஒப்பவில்லை. எதிரியை வென்று காட்டி, தன் வல்லமையைக் காட்டுவதே தமிழர் மரபாக இருந்தது. அந்தந்த மக்கள் அவர்கள் நாட்டில் உரிமையோடு வாழட்டும் என உறுதியெடுத்தனர். இதனை இளங்கோவடிகள் சுட்டிக்காட்டி உள்ளார். இதனைத் தமிழ்ப் பண்பாட்டின் தனிச் சிறப்பு எனலாம்.

ஆரியர் வருகைக்கு முன்பு, இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தனர். தமிழ் அரசர்களே ஆட்சிபுரிந்தனர். வந்தாரை வாழவைத்த தமிழகம் சொந்த மண்ணில் ஏழ்மையுற்றது ஏன் என்பதற்கு ஒரே காரணம் கோட்டை கட்டும் நாகரிகம் மறைந்தது என்பதேயாகும். கோட்டை கட்டும் நாகரிகம் போய், கோவில் கட்டும் நாகரிகம் வந்தபிறகு போர் வீரர்களை உருவாக்கும் கோட்டை இல்லாமல் போய்விட்டது. இதனால் தமிழ்நாடு பிறரால் ஆளப்படுவதாயிற்று.

சென்ற காலத்தின் சிறப்புகளை இன்றும் மனதில் கொண்டால், தமிழர்கள் உலக அரங்கில் உயர்ந்த சிறப்பு பெறுவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழினம் உலகில் தலையெடுத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும் நன்னாளாக மலரும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, தமிழா! உன் வரலாற்றைத் திருப்பிப் பார். உலகம் உன்னைத் திரும்பிப் பார்த்துப் பாராட்டும்.

- பேராசிரியர் இரா.மதிவாணன்


Next Story