கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையும் முன் வெட்டாறு வறண்டது


கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையும் முன் வெட்டாறு வறண்டது
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 7:03 PM GMT)

கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையும் முன் வெட்டாறு வறண்டு விட்டது. மெலட்டூர் பகுதியில் கருகும் நாற்றுகளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள்.

மெலட்டூர், 


காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளான வெட்டாறு, வெண்ணாறுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.

காவிரி நீர் கடைமடை பகுதிகளை தொடாத நிலையில் கடந்த வாரம் வெட்டாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டது. இதனால் தற்போது வெட்டாறு வறண்டு விட்டதால் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற்று வந்த சம்பா சாகுபடி பணிகள் முடங்கி விட்டன.

வெட்டாறு பாசன பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சம்பா நாற்றுகள் கருகும் நிலையில் உள்ளன. அவற்றை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள்.

மேட்டூர் அணை நிரம்பாததால் கடந்த பல ஆண்டுகளாக மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு போகம் சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும், சம்பா சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் வெட்டாறு உள்ளிட்ட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வது கடினமானது. இதனால் சம்பா சாகுபடி பணிகள் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு தற்போது வெட்டாறு வறண்டு விட்டது. வெட்டாறு மூலம் தண்ணீர் பெறக்கூடிய வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், சேத்து வாய்க்கால், முதல் சேத்து வாய்க்கால், பாப்பா வாய்க்கால், அச்சன்கட்ட வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களும் வறண்டு விட்டன. சம்பா நடவுக்காக தயார் செய்து வைத்திருந்த இளம் நாற்றுகள் கருகி வருகின்றன. எனவே சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை வெட்டாற்றில் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story