புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 மாணவ, மாணவிகளே படிக்கிறார்கள்
கதிராமங்கலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 மாணவ, மாணவிகளே படிப்பதால் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள சின்னக்கடைவீதி பகுதியில் தனியார் கட்டிடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரிய, ஆசிரியைகள் பணியமர்த்தப்பட்டனர்.
தொடக்கத்தில் இந்த பள்ளியில் 6-ம் வகுப்பில் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்தனர். மற்ற வகுப்புகளில் யாரும் சேரவில்லை. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து ஆசிரியர்களின் முயற்சியில் 8-ம் வகுப்பு வரை படித்து உயர் வகுப்பு படிப்பிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவரையும் 9-ம் வகுப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் தற்போது 6-ம் வகுப்பில் 2 பேரும், 9-ம் வகுப்பில் 8 பேரும் என மொத்தம் 10 மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளியில் படிக்கின்றனர். இதனால் இந்த பள்ளியில் மேலும் மாணவ, மாணவிகளை சேர்க்க தொடர்ந்து பலவிதமான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் கழிவறை வசதிகள் மற்றும் தார்சாலை வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை இல்லாததால் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் இருந்து சத்துணவு பெற்று வழங்கப்படுகிறது. மே மாதமே உயர்நிலைப்பள்ளியை தொடங்கி இருந்தால் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
விளையாட்டு மைதானம், அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுடன் உயர்நிலைப்பள்ளி செயல்படுவது அவசியம் என்பதால் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என பொது மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story