சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு 172 பேர் உயிர் தப்பினர்


சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு 172 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:31 PM GMT)

சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார்.

ஆலந்தூர், 

சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார். இதனால் 172 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு நேற்று அதிகாலை 2.50 மணியளவில் விமானம் புறப்பட்டது. அதில் 166 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர்.

நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.

இதற்கு மேல் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஓடுபாதையில் நின்றிருந்த குவைத் விமானம், விமான நிலையத்தில் உள்ள விமான தள்ளு வாகனங்கள் மூலமாக மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியாததால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடுபாதையில் சென்றபோதே விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டதால் அதில் பயணம் செய்ய இருந்த 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Next Story