கார் திருடும் கும்பல் தலைவன் கைது; 6 கார்கள், 30 பவுன் நகை மீட்பு
திருச்சியில் கார் திருடும் கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 6 கார்கள், 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
திருச்சி,
திருச்சி உலகநாதபுரம், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி(வயது 54). இவருக்கு சொந்தமான காரை, அவரது மகன் கார்த்திக் கடந்த மாதம் 14-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது அந்த காரை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கார் திருடியவரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, துணை கமிஷனர் மயில்வாகனன், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சிகாமணி ஆகியோரின் மேற்பார்வையில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், கமலநாதன் மற்றும் ஏட்டுகள், போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டிருந்த உறையூரை சேர்ந்த பழ வியாபாரி மோகனிடம் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பணம் பறித்த நபர், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பார்சல் அலுவலகம் அருகில் மறைந்திருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது பெயர் சுரேஷ்(வயது 42)என்பதும், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழபஞ்சப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் பழ வியாபாரி மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
மேலும் சுரேஷ், தமிழகம்-புதுச்சேரி மற்றும் வட மாநிலங்களுக்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் போலி மதுபானம் தயாரித்து கடத்தியதாகவும், செம்மரக்கட்டைகளை கடத்தியதாகவும் தெரிவித்தார். இதற்காக சென்னை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் 6 கார்களை திருடி மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
திருச்சியில் கடந்த மாதம் 14-ந் தேதி கிருஷ்ணவேணியின் கார், கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி சென்னை கொரட்டூரில் ஒரு கார், சென்னை திருமங்கலத்தில் மே மாதம் 22-ந் தேதி ஒரு கார், ஜூன் மாதம் செங்கல்பட்டில் ஒரு கார், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கார், கடந்த மாதம் 12-ந் தேதி சென்னை கே.கே.நகரில் ஒரு கார் என மொத்தம் 6 கார்களை திருடியது தெரியவந்தது.
மேலும் கடந்த மாதம் 1-ந் தேதி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருச்சி உறையூர் போலீஸ் எல்லையில் சீனிவாசாநகர் 17-வது குறுக்குத்தெருவில் வசிக்கும் சரஸ்வதி பாலமந்திர் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் திருமுருகன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. சுரேஷ் தலைமையில் தான் கார் திருடும் கும்பல் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைதான சுரேஷ், கார்களை மறைத்து வைத்த இடங்களையும், நகையை மறைத்து வைத்த இடத்தையும் அடையாளம் காட்டிய பின்னர், போலீசார் 6 கார்களையும், 30 பவுன் நகைகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட கார்கள் மற்றும் நகையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். பின்னர் போலீசார் சுரேசை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சுரேஷின்கூட்டாளிகளான திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story