திண்டுக்கல்லில், தட்டுப்பாட்டை போக்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதல் தண்ணீர் கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நிலவும் தட்டுப்பாட்டை போக்க, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதல் தண்ணீர் பெறப்பட்டுள்ளது என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. மேலும் பெரும்பாலான குளங்களும் வறண்டுவிட்டன. திண்டுக்கல் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும் வறண்டுவிட்டது. மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது திண்டுக்கல் நகர் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கூடுதல் தண்ணீர்
ஆத்தூர் காமராஜர் அணை வறண்டுவிட்டதால் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள குடிநீர் வடிகால்வாரிய திட்ட முதன்மை அலுவலர்களை சந்தித்து, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் நகருக்கு கூடுதல் தண்ணீர் வழங்கும் படி அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர்.
இதன் மூலம் திண்டுக்கல் நகர் பகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் பெரும்பாலான வால்வு சேதமடைந்துள்ளதால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிந்ததும் நகர் பகுதியில் தட்டுப்பாடு இன்றி 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story