கிருஷ்ணகிரி: 756 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி


கிருஷ்ணகிரி: 756 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
x
தினத்தந்தி 12 Sep 2018 11:30 PM GMT (Updated: 12 Sep 2018 10:14 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 756 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து விழா கொண்டாட உள்ளனர்.

விநாயகர் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதித்துள்ள தேதி, எத்தனை நாள், ஊர்வலமாக எடுத்து செல்வது, எந்த நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்பன போன்றவை குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரை ஓசூர் உட்கோட்டத்தில் 298 சிலைகளும், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் 111 சிலைகளும், பர்கூர் உட்கோட்டத்தில் 65 சிலைகளும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் 88 சிலைகளும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் 194 சிலைகளும் என மாவட்டம் முழுவதும் 756 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி, வேப்பனப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் சிறியது முதல் பெரியது வரை வைக்க உரிய ஏற்பாடுகளை பக்தர்கள் செய்துள்ளனர்.

இந்த விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

Next Story