வேலூர் மத்திய சிறையில் இருந்து 3 பெண்கள் உள்பட 32 பேர் விடுதலை


வேலூர் மத்திய சிறையில் இருந்து 3 பெண்கள் உள்பட 32 பேர் விடுதலை
x
தினத்தந்தி 21 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 9:22 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர், 


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருபவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

வேலூர் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருபவர்களில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 63 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 7-வது கட்டமாக நேற்று காலை மேலும் 29 ஆண் கைதிகள் மற்றும் 3 பெண் கைதிகள் என மொத்தம் 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 32 கைதிகளுக்கும் அவர்களுடைய உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக அவர்களுடைய உறவினர்கள் சிறைக்கு வெளியே காத்திருந்தனர். விடுதலையாகி வந்தவர்களை உறவினர்கள் அழைத்துச்சென்றனர். 

Next Story