ரபேல் போர் விமான முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும் - பிரகாஷ்காரத் வலியுறுத்தல்


ரபேல் போர் விமான முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும் - பிரகாஷ்காரத் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sept 2018 5:00 AM IST (Updated: 23 Sept 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டலில்தான் அ.தி.மு.க. அரசு இயங்கி கொண்டிருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது. இந்த அ.தி.மு.க. அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க தெரியாமல் மோடி அரசை மட்டுமே நம்பி இருக்கிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

ரபேல் போர் விமானம் வாங்குவது குறித்து மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானவை என சொல்லும் வகையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் அளித்துள்ள பேட்டியில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. உண்மையான பங்குதாரர் யார் என்றால் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தான்.

இந்த நிறுவனத்திடம் 136 ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் மூலம் 36 விமானங்களை வாங்குவதற்கும், மீதமுள்ள விமானங்களை அனில் அம்பானி குரூப்புக்கும் மாற்றி ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story