கரூர்-கோவை 6 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கொங்கு மண்டல விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்


கரூர்-கோவை 6 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கொங்கு மண்டல விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:37 AM IST (Updated: 23 Sept 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

கரூர்-கோவை 6 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கொங்கு மண்டல விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

காமநாயக்கன்பாளையம்,

கரூர்-கோவை 6 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு அருகில் விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கரூர் முதல் கோவை வரை ஆறு வழிச்சாலை (என்.எச்-67) மற்றும் கோவை கிழக்கு புறவழிச்சாலை ஆகிய 2 சாலைகள் ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் அமைய உள்ளதாக மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதற்காக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே இந்த ஆறு வழிச்சாலை, புறவழிச்சாலை ஆகிய திட்டங்களை கைவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்திற்கு வழுக்குப்பாறை பாலு தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் சதீஷ்குமார் வரவேற்றார்.

போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு.செல்லமுத்து பேசியதாவது:-

கெயில் எரிவாயு குழாய்க்கு, 8 வழிச்சாலைக்கு என கொஞ்சம் கொஞ்சமாக எங்களது விளை நிலங்களை எடுக்காமல் மொத்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து விவசாயிகளையும், அரசு ஊழியராக்கி விடுங்கள் விவசாய நிலங்களை அரசே வைத்துக்கொள்ளட்டும். விவசாயிகள் அனைவரும் அரசு ஊழியராகி விவசாயம் செய்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ரூ.45-க்கு விற்ற ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்போது ரூ.14-க்கு விற்கப்படுகிறது.

மஞ்சளுக்கு உரிய விலை இல்லை. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கும் உரிய விலை இல்லை. விவசாயி என்ன செய்ய முடியும். விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு விலை நிர்ணயம் செய்ய உரிமையில்லை. விவசாயி என்று விலை நிர்ணயம் செய்கிறாரோ அன்றுதான் விவசாயிக்கு உண்மையான விடியல். உலக வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி புதுடெல்லியில் பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ், கோவை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எ.கு.பழனிச்சாமி, கொங்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் ராஜாமணி, முன்னாள் எம்.பி. நடராஜன், பாசன சபை தலைவர் கண்டியன் கோவில் கோபால் மற்றும் கொங்கு மண்டல விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு ராமலிங்கம் ராமுகுட்டி, பழனிசாமி, நந்தகுமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story