செல்போன் மூலம் பாக்கெட் சாராயம் விற்பனை - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்


செல்போன் மூலம் பாக்கெட் சாராயம் விற்பனை - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2018 11:15 PM GMT (Updated: 25 Sep 2018 10:46 PM GMT)

தலைவாசல் அருகே செல்போன் மூலம் பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெறும் அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைவாசல்,

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி வசிஷ்ட நதி பாலம் சுடுகாடு அருகில் மோட்டார்சைக்கிளில் கொண்டு வரப்பட்டு சாராய பாக்கெட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே தலைவாசல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சாக்குமூட்டை வைத்து மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் அவரை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர் தப்பிஓடிவிட்டார்.

பின்னர் அவர் விட்டு சென்ற, மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குமூட்டையை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் 15 லிட்டர் பாக்கெட் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து, தப்பிஓடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் தப்பிஓடியவர் தலைவாசல் அருகே உள்ள ராமசேஷபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்(வயது 28) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக நகர்புறங்களில் பல்பொருள் அங்காடிகளில் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை வினியோகம் செய்யும் வணிக நடைமுறை உள்ளது. இதற்கு ஒரு படி மேலே ஒரு சில அசைவ மற்றும் சைவ ஓட்டல்களில், உணவுகளை செல்போன் மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து கொடுக்கும் வணிக கலாசாரமும் நகர் பகுதியில் அதிகரித்து வருகிறது.

இந்த வணிக நடைமுறையை தலைவாசல் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யும் கும்பலும் பின்பற்ற தொடங்கி உள்ளதாக போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகள், குளங்கள், ஆற்றங்கரையோரம் போன்ற ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், சுடுகாடுகளில் கூடும் மது பிரியர்கள், செல்போன் மூலம் இங்கே 20 பேர் கூடி இருக்கிறோம், தலா 2 பாக்கெட் வீதம் 40 பாக்கெட் சாராயம் தேவை என்று அவர்கள் ஆர்டர் கொடுக்கிறார்கள். பின்னர் சாக்குமூட்டையில் பாக்கெட் சாராய பாக்கெட்டுகளை வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சாராய வியாபாரி வருகிறார். அவர் ஐந்தே நிமிடங்களில் விற்பனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

அதுபோன்று ஒரு நிகழ்வாக தான் தலைவாசல் அருகே நேற்றைய சம்பவமும் நடந்துள்ளது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மதுபிரியர்களே, போலீஸ் வருவதை பார்த்து, சாராய வியாபாரியை ஓடி விடுங்கள் என்று கூறி அவரை தப்ப விட்டனர். இதுபோன்ற சாராய வியாபாரத்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story