போட்டித்தேர்வுக்கான அரசு பயிற்சி மையத்தை வணிக வளாகமாக மாற்ற முயற்சி கலெக்டரிடம் மாணவர்கள் புகார் மனு


போட்டித்தேர்வுக்கான அரசு பயிற்சி மையத்தை வணிக வளாகமாக மாற்ற முயற்சி கலெக்டரிடம் மாணவர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 8 Oct 2018 10:30 PM GMT (Updated: 8 Oct 2018 8:20 PM GMT)

போட்டித்தேர்வுக்கான அரசு பயிற்சி மையத்தை வணிக வளாகமாக மாற்ற முயற்சி நடப்பதாக கலெக்டரிடம் மாணவர்கள் புகார் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள ‘டிரேஸ் அகாடமி’ பயிற்சி மையத்தில் போட்டி தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்கள் காமராஜ், பாஸ்டின் ஆகியோர் தலைமையில் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழு சார்பில் டிரேஸ் என்ற பெயரில் போட்டி தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையம் கடந்த 2008-ம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இந்த மையத்தில் தினமும் 300 பேர் பயின்று வந்தனர். இங்கு படித்த மாணவ, மாணவிகளில் பலர் தமிழக அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முதல் குரூப் 4 வரை உள்ள தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ்குமார் பொறுப்பில் இந்த பயிற்சி மையம் இருந்த போது பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் இங்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி ஊக்கப்படுத்தி வந்தார்கள்.

இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பயிற்சி மையம் அப்போதெல்லாம் இரவு 9.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டு இருந்தது. திருச்சியில் தங்கி இருந்து பகுதிநேரமாக ஏதாவது வேலை பார்த்து விட்டு பயிற்சி பெறுபவர்கள், திருச்சியை தவிர வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இரவு வரை தங்கி இருந்து படிப்பதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்போது பயிற்சி முடியும் நேரம் மாலை 6.30 மணியாக குறைக்கப்பட்டு விட்டது.

இதனால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 6.30 மணிக்கு மேல் பயிற்சி மையத்தில் யாரையும் இருக்க விடாமல் விரட்டி விடுகிறார்கள். மேலும் பயிற்சி மைய வளாகத்தில் போதுமான கழிப்பறை வசதியும் இல்லை.

இதனால் மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இருக்கும் ஒரே கழிப்பறையையும் பக்கத்து வளாகத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் பூட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் மாணவிகள் பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்து வருகிறார்கள்.

மின் விசிறி வசதி இல்லை, பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்படுவது இல்லை. மொத்தம் உள்ள 12 கணினிகளில் 3 கணினிகள் தான் வேலை செய்கின்றன. மற்றவை பழுதடைந்த நிலையில் உள்ளன. பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தேர்வுகளும் வைக்கப்படுவது இல்லை.

இதுபோன்ற காரணங்களால் தற்போது இங்கு 50 மாணவ, மாணவிகள் தான் பயிற்சி பெற்று வருகிறார்கள். மொத்தத்தில் இந்த பயிற்சி மையத்தை மூடிவிட்டு வணிக வளாகமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி மையத்தை மறு சீரமைப்பு செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் சம்சுதீன், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேரும் மக்கும் குப்பைகளை அவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும் என அறிவித்து உள்ளது. இதனால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். மேலும் கொசு தொல்லையும் ஏற்படும். எனவே மக்கும் குப்பைகளை மாநகராட்சி நுண்ணுரம் செயலாக்க மையங் களில் மட்டுமே உரமாக மாற்ற வேண்டும். வீடுகளில் உரமாக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

வாழவந்தான் கோட்டை ஊராட்சி அய்யம்பட்டியை சேர்ந்த தண்டபாணி என்பவர் கொடுத்த மனுவில், மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வரும் நர்சரி பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி இருந்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் கொடுத்த மனுவில், திருச்சி நகரில் இயக்கப்படும் டவுண்பஸ்கள் மழை நீரில் ஒழுகாதபடி பழுதுபார்க்கப் படவேண்டும், திருச்சியில் இருந்து இனாம் குளத்தூருக்கு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும், காலை, மாலை வேளைகளில் பெண்களுக்கான சிறப்பு பஸ்கள் விடவேண்டும் என கோரப்பட்டு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் லால்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும், ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை அதிகப்படுத்த வேண்டும், குறுவை பின் பட்டத்தை தாக்கும் சாரு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.'

Next Story