சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள் உற்பத்தி தீவிரம்


சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள் உற்பத்தி தீவிரம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 7:43 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டிப்பட்டி,


ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழில் அதிகம் நடைபெறுகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 100 சதவீத காட்டனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சேலைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இதன் காரணமாக சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி கூடங்களில் இரவு பகலாக சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்காக பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய டிசைன்களில் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி ஜோதிகா, கும்கி, கபாலி, ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் ஆர்டர்கள் வந்திருப்பதால், சேலை உற்பத்தி செய்யும் பணியில் நெசவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், அதிகளவில் ஆர்டர்கள் வந்திருக்கும் நிலையில் சமீபகாலமாக சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரை தடையின்றி மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story