புதுச்சேரியில் இருந்து சீர்காழிக்கு : காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


புதுச்சேரியில் இருந்து சீர்காழிக்கு : காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 9:30 PM GMT)

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சீர்காழிக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 


கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ் ஏட்டுகள் முத்துக்குமரன், குமார், குகன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடன் அந்த காரை போலீஸ் ஏட்டுகள் முத்துக்குமரன், குகன், குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று, கடலூர் முதுநகர் அடுத்த ஆலப்பாக்கத்தில் அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த காரை சோதனை செய்த போது, காரில் 87 அட்டை பெட்டிகளில் 4,056 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்த போது, அவர் குறிஞ்சிப்பாடி அருகே சம்பாரெட்டிபாளையம், கவரதெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் மணிமாறன் (வயது 27) என்று தெரிய வந்தது. அவர் அந்த மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சீர்காழிக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த காருடன் மணிமாறனை போலீசார் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, மணிமாறனை கைது செய்தார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், அதில் இருந்த 4 ஆயிரத்து 56 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற மதுபாட்டில்கள் கடத்தல் நடப்பதாகவும், அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story